அவளது கண்ணீரில் காதல்




பிரியமே,
எப்படிச் சாகடிப்பது
உன் நினைவுகளின்
இராவணத் தலைகளை ?
0
மழை பெய்து முடித்த
ஓர் ஈர இரவில்,
அக்ரகாரத்து ஓரத்தில்
அணையாமல் அலையும்
அகல்விளக்காய்,
சுருள் முடிகள் அலைய,
வெளிச்சம் விட்டு
வெளியேறுகின்றன
என் சிந்தனைகள்.
ரோஜாப் பூவின் கழுத்தை
மெல்லமாய் கிள்ளுவதை
காணும் போதெல்லாம்,
சைவக் கிளி
ஏன் பூவைக் கொல்கிறது
என்பாய்,
மருதாணித் தளிர்களை
உதடுகளில் இட்டாயா
என
உத்தரவு தருமுன்
உதடு வருடுவாய்.
இப்போதெல்லாம்
நான்
துளசிச் செடிமீது,
கூந்தல் ஈரத்தை
சொட்டும் போது
அதுவும் என்னோடு அழுவதாய்
அசாதாரணப் பிரமை எனக்கு.
என்
பூஜையறைக் கண்ணீரில்
சமீபகாலமாய்
பக்தியின் நதி பாயாமல்
காதலின்
கடலே கொந்தளிக்கிறது.
உதடுகள் இழுக்கும்
மந்திரங்களின் தேர்கள்
ஓர்
இயந்திரத் தனமாகவே
இயங்குகின்றன.
உன் பத்ரகாளியும்,
என் அக்ரகாரமும்
உனக்கும் எனக்கும் இடையே
பாலம் கட்ட
தடை போட்டபின்,
நிச்சயமற்ற பச்சையமாய்
சில
நிறக்கலவைகள் நம் வாழ்வில்,
வீற்றிருக்கும் காலங்கள்
என்
காயங்களை
ஆற்றியிருக்கக் கூடும்.
ஏன் தான்
போட்டுத் தொலைத்தாய் ?
உன் மழலைக்கு
என் பெயரை ?

Comments